'அவுட் சோர்சிங்' முறையில் அரசு பொறியாளர்கள் தேர்வு
'அவுட் சோர்சிங்' முறையில் அரசு பொறியாளர்கள் தேர்வு
ADDED : டிச 28, 2024 12:52 AM
சென்னை: கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் பணியிடங்களை, 'அவுட் சோர்சிங்' முறையில் நிரப்பும் பணிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் துவக்கி உள்ளது.
தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில், இந்த வாரியம் வாயிலாக, குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் ஒப்பந்ததாரர் வாயிலாக மேற்கொள்ளப்பட்டாலும், அதை கண்காணிக்க வாரியத்தில் பொறியாளர்கள் இருக்க வேண்டும்.
மேலும், வாரிய திட்டங்களில் வீடுகள் ஒதுக்கீடு, சீரமைப்பு போன்ற பணிகளை கண்காணிப்பதற்கும் பொறியாளர்கள் தேவை.
இதற்காக, பல்வேறு நிலைகளில் பொறியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பொறியாளர்கள் இல்லாத நிலையில், வாரிய கட்டுமான திட்டங்கள் தொடர்பான பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் நிறுவனம் வாயிலாக, 'அவுட் சோர்சிங்' முறையில், இப்பணியிடங்களை நிரப்ப வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, திட்டமிடல் பிரிவுக்கான கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர்களுக்கான, ஆறு பணியிடங்களை நிரப்பும் பணிகள் துவங்கி உள்ளன.
இதேபோன்று, மேலாளர், ஒருங்கிணைப்பாளர், சமூக பங்கேற்பு உதவியாளர், கணினி உதவியாளர் என, 38 பணியிடங்களையும், அவுட் சோர்சிங் முறையில் நிரப்பும் பணிகள் துவங்கியுள்ளதாக, வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.