ADDED : ஜன 01, 2024 03:13 AM

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கடந்தாண்டு போல, தலா, 1,000 ரூபாய் ரொக்கம், கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
அதன்படி, 2023 பொங்கலுக்கு, 1,000 ரொக்கப்பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே, 20௨3 செப்டம்பர் முதல் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது.
டிசம்பரில் புயலால் பாதிக்கப்பட்ட, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 25 லட்சம் கார்டுதாரர்களுக்கு தலா, 6,000 ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் அதீத கன மழை பெய்ததால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடும் பாதிப்பை சந்தித்த, 6.81 லட்சம் கார்டுதாரர்களுக்கு தலா, 6,000 ரூபாய்; துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள, 14.31 லட்சம் கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்பை எவ்வாறு வழங்குவது; 1,000 ரூபாய் ரொக்கம் இன்றி, அரிசி, சர்க்கரை, வெல்லம், கருப்பு மட்டும் வழங்கலாமா என, அரசு தரப்பில் ஆலோசனை நடந்தது.
லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இல்லை என்றால், பொதுமக்களிடம் கடும் அதிருப்தி ஏற்படும் என்று, அரசு கருதியது.
எனவே, கடந்த ஆண்டை போலவே, வரும் பொங்கலுக்கும் தலா, 1,000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பொங்கலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளதால், இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.