தண்ணீர் தேங்கிய தடங்களில் செல்லக்கூடாது: பஸ் டிரைவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
தண்ணீர் தேங்கிய தடங்களில் செல்லக்கூடாது: பஸ் டிரைவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
UPDATED : நவ 26, 2024 04:54 PM
ADDED : நவ 26, 2024 04:51 PM

சென்னை: தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அப்பகுதிகளில் பஸ்களை இயக்கக்கூடாது என டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, சென்னை, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நல்லமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இன்றும் , நாளையும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அது பின்வருமாறு:
*சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்.
*தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர பஸ்களை காட்டாற்று ஓரங்களில் உள்ள சாலைகளில் கவனமாக இயக்க வேண்டும்.
*தண்ணீர் தேங்கி உள்ள வழித்தடங்களில் பஸ்களை இயக்கக்கூடாது.
*பஸ்களில் மழைநீர் ஒழுகுவது போன்ற குறைகள் இருந்தால் உடனடியாக மேலாளரிடம் தெரிவித்து சரி செய்ய வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.