பெரிய மழையை எதிர்கொள்ள அரசு தயார்: ஸ்டாலின் அறிவிப்பு
பெரிய மழையை எதிர்கொள்ள அரசு தயார்: ஸ்டாலின் அறிவிப்பு
ADDED : அக் 20, 2025 02:29 AM

சென்னை: ''பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு, அரசு தயார் நிலையில் உள்ளது; இதுகுறித்து கலெக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை, பல்வேறு மாவட்டங்களில் தீவிரம் அடைந்துள்ளது. கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பருவ மழையை எதிர்கொள்ள செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள, மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மழையை எதிர்கொள்ள எடுத்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோவை மற்றும் நீலகிரி கலெக்டர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
ஆயத்த நிலை மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங் களுக்கு அழைத்து செல்லவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்க, முகாம்களை தயாராக வைத்திருக்கவும், அங்கு, உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யவும், கலெக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிக்காத வகையில், நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை விரைவாக கிடங்குகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.
கூட்டத்தில், தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய் துறை செயலர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை கமிஷனர் சிஜி தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வுக்கு பின், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
விருது நகர், தேனி, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. ஆனால், பாதிப்பு ஏதும் இல்லை. புயல் வர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனவே, கடலோரம், ஆற்றோரம் இருப்போரை, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவ மழையை எதிர்கொள்ள, இரண்டு, மூன்று மாதங்களாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.
தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்புள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியது தவறான செய்தி. எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.