அரசால் நிழல் பட்ஜெட் நிஜமானது: வேளாண் அமைச்சர் பெருமிதம்
அரசால் நிழல் பட்ஜெட் நிஜமானது: வேளாண் அமைச்சர் பெருமிதம்
ADDED : பிப் 23, 2024 02:22 AM
சென்னை: வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு, அமைச்சர் பன்னீர் செல்வம் அளித்த பதிலுரை:
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, நேரடியாக சென்று விவசாயிகளை சந்தித்து குறைகளை அறிந்து, அதற்கு உரிய திட்டங்களை உருவாக்க, முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த மூன்று பட்ஜெட்களுக்கு, 1,311 விவசாயிகளை சந்தித்து, 1,267 கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். அதில், 548 கோரிக்கைகள் பட்ஜெட்டில் திட்டங்களாக இடம் பெற்றன.
இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நான்காவது பட்ஜெட் தாக்கலுக்கு, 549 விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
முதல் பட்ஜெட் வாயிலாக, 77 லட்சம் விவசாயிகளும், இரண்டாவது பட்ஜெட் வாயிலாக, 78 லட்சம் விவசாயிகளும், மூன்றாவது பட்ஜெட் வாயிலாக, 1.04 லட்சம் விவசாயிகளும் பயன் பெற்றுள்ளனர்.
கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை, 215 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. வறட்சி, புயல், திடீர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, மூன்று ஆண்டுகளில் 940 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 12.58 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளில், 2 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே, இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த மூன்றாண்டுகளில், 2 லட்சம் விவசாயிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து, நானும், உணவுத் துறை அமைச்சரும் முதல்வரிடம் எடுத்து கூறியுள்ளோம். இது, முதல்வரின் பரிசீலனையில் உள்ளது.
பயிர் காப்பீடு திட்டம் வாயிலாக, 25 லட்சம் விவசாயிகளுக்கு, 4,434 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசும், முதல்வரும் எடுத்த நடவடிக்கையால், நிழல் பட்ஜெட் நிஜமாகி இருக்கிறது. சிறுதானிய சாகுபடி உற்பத்தியும், 1 லட்சம் டன் அளவிற்கு அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.