1.46 கோடி சேலை; 1.44 கோடி வேட்டி உற்பத்தி செய்ய அரசாணை வெளியீடு
1.46 கோடி சேலை; 1.44 கோடி வேட்டி உற்பத்தி செய்ய அரசாணை வெளியீடு
UPDATED : ஏப் 17, 2025 03:54 AM
ADDED : ஏப் 17, 2025 12:47 AM

பொங்கல் பண்டிகையின்போது விநியோகம் செய்ய, 1.46 கோடி சேலை; 1.44 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கைத்தறி மற்றும் துணிநுால் துறை செயலர் அமுதவல்லி வெளியிட்ட அரசாணை:
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை உரிய காலத்தில் துவங்க ஏதுவாக, அனுமதி வழங்கப்படுகிறது.
சமூக பாதுகாப்பு திட்டம், கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிப கழகம், முதியோர் ஓய்வூதிய திட்டம் போன்றவற்றின் தேவை அடிப்படையில், உற்பத்தி இலக்குக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 1 கோடியே 77 லட்சத்து 64,000 சேலைகள்; 1 கோடியே 77 லட்சத்து 22,000 வேட்டிகள் தேவை.
அதில் கொள்முதல் செய்யும் முகமை நிறுவனங்கள், சங்கங்களில் இருப்பு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் இருப்பு, கூட்டுறவு சங்க பதிவாளரிடம் கடந்தாண்டு உற்பத்தியில் இருப்பாக, 31.54 லட்சம் சேலைகள்; 33.12 லட்சம் வேட்டிகள் உள்ளன.
இவை நீங்கலாக, 1 கோடியே 46 லட்சத்து 10,000 சேலைகள்; 1 கோடியே 44 லட்சத்து 10,000 வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி பணியானது, கைத்தறி, விசைத்தறி, பெடல் தறி மூலம் நிறைவேற்றப்படும்.
சேலை, 45 அங்குலம் அகலம், 5.50 மீட்டர் நீளம்; வேட்டி, 50 அங்குலம், 3.75 மீட்டர் நீளம் கொண்டது. இதற்கு முதற்கட்டமாக, 75 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பொங்கலுக்கு வழங்க, 1.77 கோடி வேட்டி; 1.77 கோடி சேலை உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்தனர். நுால், கூலி, நிதி வழங்க தாமதத்தால் மார்ச் இறுதி வரை உற்பத்தி நடந்தது.
மார்ச், 30 வரை இலவச வேட்டி, சேலையை பெறலாம் என அரசு அறிவித்திருந்தும், 1.45 கோடி சேலை; 1.43 கோடி வேட்டி விநியோகித்ததாக அரசு கூறியது. ஆனால், பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்களுக்கு வேட்டி, சேலை இன்று வரை சென்றடையவில்லை.
பொங்கலின்போது பணம் வழங்கினால், தனி நோட்டில் கையெழுத்து பெறுவதுபோல, இலவச வேட்டி, சேலைக்கும் கையெழுத்து பெற்றிருந்தால், எவ்வளவு லட்சம் பேர் பயன் பெறவில்லை என்பது தெரியவந்திருக்கும்.
தவிர, தாமதமாக உற்பத்தி செய்யப்பட்ட 31.54 லட்சம் சேலை; 33.12 லட்சம் வேட்டியை இருப்பு உள்ளதாக காட்டி, தற்போதைய உற்பத்தியில் குறைத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பல லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலை சென்றடையவில்லை என்பதை, இந்த அரசாணையே வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.
- - - நமது நிருபர் -