ADDED : செப் 27, 2024 10:07 PM
சென்னை:பயன்பாடில்லாத பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க, பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
நடவடிக்கை
சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், செயலர் மதுமதி பிறப்பித்த உத்தரவு:
அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை, டிசம்பருக்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும். சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவக்க வேண்டும்.
மழைக்காலம் துவங்க உள்ளதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படும் முன், பள்ளிகளில் ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத நிலையிலும் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும்.
அதற்கு பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி, பொதுப்பணித் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விஷப் பூச்சிகளிடம் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், தற்போதைய காலாண்டு விடுமுறையில், பள்ளி வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
இடைநிற்றல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் உள்ளிட்டவற்றை தவிர்க்க, நீண்ட காலமாக பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.
கண்காணிப்பு
குழந்தைகளை 'போக்சோ' குற்றத்திற்கு ஆளாக்காத வகையில், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆர்த்தி, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உமா பங்கேற்றனர்.