sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் துவரம் பருப்பில் கலப்படம் கண்டுபிடிப்பு: மாநிலம் முழுதும் சோதனை நடத்த அரசு உத்தரவு

/

ரேஷன் துவரம் பருப்பில் கலப்படம் கண்டுபிடிப்பு: மாநிலம் முழுதும் சோதனை நடத்த அரசு உத்தரவு

ரேஷன் துவரம் பருப்பில் கலப்படம் கண்டுபிடிப்பு: மாநிலம் முழுதும் சோதனை நடத்த அரசு உத்தரவு

ரேஷன் துவரம் பருப்பில் கலப்படம் கண்டுபிடிப்பு: மாநிலம் முழுதும் சோதனை நடத்த அரசு உத்தரவு

11


UPDATED : ஏப் 27, 2025 03:49 AM

ADDED : ஏப் 27, 2025 03:47 AM

Google News

UPDATED : ஏப் 27, 2025 03:49 AM ADDED : ஏப் 27, 2025 03:47 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை, அம்மாவட்ட கலெக்டர் கண்டுபிடித்தார். அதற்கு காரணமான, இரு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள வாணிப கழக கிடங்குகள், ரேஷன் கடைகளில் பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு உணவு துறை உத்தரவிட்டு உள்ளது.

மேலும், இந்த கலப்பட பருப்பை அரசுக்கு வழங்கிய, ஐந்து தனியார் நிறுவனங்களை விசாரிக்கவும், கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வு

தமிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய், லிட்டர் பாமாயில், 25 ரூபாய் என்ற, குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

அதேசமயம், அவற்றை தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் சந்தை விலைக்கு கொள்முதல் செய்கிறது.

கொள்முதல் செய்யப்பட்ட பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள், அரசு நிறுவனமான வாணிப கழக கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

தற்போது, அருணாச்சலா, எஸ்.கே.எஸ்., இண்டஸ்ட்ரீஸ், அக்ரிகோ, பெஸ்ட் உட்பட, ஐந்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 60,000 டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகேஉள்ள ரேஷன் பொருட்கள் கிடங்கில், அம்மாவட்ட கலெக்டர் சரவணன், சில தினங்களுக்கு முன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பு மூட்டையில், பட்டாணி பருப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார். அங்கிருந்த மற்ற மூட்டைகளையும் ஆய்வு செய்ததில், கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

'சஸ்பெண்ட்'

அந்த பருப்பு மூட்டைகள், கடைகளுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. கலப்பட விவகாரத்தில், மதுரை மண்டல அதிகாரி லியோ ராபர்ட், வாடிப்பட்டி கிடங்கு மேலாளர் ஆனந்த் ஆகியோரை, வாணிப கழகம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மாவட்டத்திலேயே, பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதுகண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, மக்களுக்கு தரமான பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய, மாநிலம் முழுதும் வாணிப கழக கிடங்குகள், ரேஷன் கடைகளில் பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக, வாணிப கழக கிடங்குகளிலும், பருப்பு கொள்முதல் டெண்டர் எடுத்த நிறுவனங்களிலும், அதிரடி சோதனை நடத்தி, கலப்படத்திற்கான காரணத்தை கண்டறிய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ரேஷன் கடைகளில் சமீப காலமாக வழங்கப்படும் பருப்பு, தரமற்று, சுவையற்று இருப்பதாக, பொதுமக்கள் புகார் சொல்வதாக, கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

தீர்வு தராது

இதுதொடர்பாக பெறப்பட்ட புகாரில் தான், திண்டுக்கல் கலெக்டர், கிடங்கில் ஆய்வு செய்து, பருப்பில் கலப்படம் இருப்பதை கண்டிபிடித்தார். இந்த விவகாரத்தில், இரு அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது; இது தீர்வு தராது.

பருப்பு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், குறைந்த விலையில் வழங்குவதாக கூறி, கொள்முதல் ஆணையை பெற்று விடுகின்றன.

அதனால், ஏற்படும் நஷ்டத்தை சரிக்கட்ட, துவரம் பருப்பில் இதுபோன்று பட்டாணியையும், துாசுகளையும் கலப்படம் செய்து அனுப்புகின்றன.

தடுக்க முடியும்

எனவே, கலப்படம் கண்டறியப்பட்ட பருப்பு, எந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது; அந்நிறுவனம் எந்தெந்த கிடங்குகளுக்கு பருப்பு அனுப்பி உள்ளது என்பதை கண்டறித்து, தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

எந்த நிறுவனம் தவறு செய்தது என்று கண்டுபிடிக்கப்பட்டதும், அதன் பெயரை மக்களுக்கு தெரிவித்து, அந்நிறுவனம், வரும் காலங்களில் பருப்பு டெண்டரில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்.

அப்போது தான், தரமற்ற பருப்பு வழங்கப்படுவது முற்றிலுமாக தடுக்க முடியும். இந்த பணிகளை மேற்கொள்ள, வேறு துறை அதிகாரிகள் அடங்கிய தனி குழு அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us