'பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு ரூ.125 கோடி நிலுவை'
'பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு ரூ.125 கோடி நிலுவை'
ADDED : அக் 27, 2024 02:27 AM
சென்னை:'பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய, 125 கோடி ரூபாய் ஊக்கத்தொகை நிலுவையை, அரசு உடனே வழங்க வேண்டும்' என, பா.ம.க., தலைவவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 35 லட்சம் லிட்டர் பாலை, ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. அதற்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, கடந்த டிசம்பரில், தமிழக அரசு அறிவித்தது. அத்தொகை, கடந்த 118 நாட்களாக வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய, 1.05 கோடி ரூபாய் வீதம், பால் உற்பத்தியாளர்களுக்கு, ஆவின் நிறுவனம் பாக்கி வைத்துள்ளது.
இந்தத் தொகை, 125 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு விவசாயிக்கும், ஆயிரக்கணக்கில் நிலுவைத் தொகை வழங்க வேண்டி உள்ளது.
எனவே, 125 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க, ஆவின் நிறுவனத்திற்கு, அரசு உத்தரவிட வேண்டும்.
கால்நடைகளுக்கான தீவனம் உள்ளிட்ட, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், பசும்பாலுக்கு லிட்டருக்கு 45 ரூபாய்; எருமை பாலுக்கு 54 ரூபாய் என, கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.