'கிட்னி திருட்டு செய்தி வெளியாகியும் மெத்தனமாக செயல்படும் தமிழக அரசு'
'கிட்னி திருட்டு செய்தி வெளியாகியும் மெத்தனமாக செயல்படும் தமிழக அரசு'
ADDED : ஜூலை 22, 2025 12:57 AM

சென்னை: 'கிட்னி திருட்டு குறித்து, முதல்வர் ஸ்டாலின் இனியும் தாமதிக்காமல், உடனே சிறப்பு புலனாய்வு படை அமைத்து விசாரிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி, தி.மு.க., நிர்வாகி திராவிட ஆனந்தன் என்ற நபர் வாயிலாக நடந்துள்ள கிட்னி திருட்டு, நாட்டையே அதிர வைத்துள்ளது.
குறிப்பாக, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், தி.மு.க.,வினருக்கு தொடர்புடைய சில மருத்துவமனைகளிலும் தான், கிட்னி எடுக்கப்பட்டது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து செய்திகள் வெளியாகி ஐந்து நாட்களாகியும், கிட்னி திருட்டில் புரோக்கராக செயல்பட்ட தி.மு.க., நிர்வாகி ஆனந்தனை, தமிழக அரசு கைது செய்யவில்லை.
தனிப்படை அமைத்து தேடி வருவதாக காவல் துறை கூறி வருகையில், அந்த நபர், அவரது வீட்டருகே இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரியும், 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தி.மு.க.,வினராக இருக்கின்றனர்.
தி.மு.க., அரசு, தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையே, அவர்கள் இத்தனை தைரியமாக குற்றச் செயல்களில் ஈடுபட காரணம்.
அதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது போல், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை செயல்படுகிறது.
தமிழகத்தில் கந்து வட்டி தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால், நாமக்கலில் கிட்னி திருட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், கந்து வட்டி கடனை தீர்க்கவே, சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்ய முன்வந்ததாக தெரிவிக்கின்றனர். உடல் உறுப்பு திருட்டு என்பது, உலகளவிலான பெரும் குற்றங்களில் ஒன்று.
ஆனால், நாமக்கலில் கிட்னி திருட்டு குறித்து செய்தி வெளியாகியும், தி.மு.க., அரசு இத்தனை மெத்தனப்போக்கில் செயல்படுவது, இக்குற்றத்தில் தி.மு.க., புள்ளிகளுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
தி.மு.க., நிர்வாகி ஆனந்தன் தனிநபராக இதை செய்திருக்க வாய்ப்பில்லை. முதல்வர் ஸ்டாலின் தாமதிக்காமல், உடனே சிறப்பு புலனாய்வு படை அமைத்து, இக்குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்.
இதில் தொடர்புடைய நபர்கள், மருத்துவமனைகள் என, அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.