UPDATED : டிச 29, 2022 07:26 AM
ADDED : டிச 29, 2022 07:10 AM
சென்னை-தமிழகத்தின் மாநில விலங்கு இனத்தை பாதுகாக்க, நீலகிரி வரையாடு திட்டத்தை, அரசு அறிவித்துள்ளது.
![]() |
நீலகிரி வரையாடு, மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்று. வரையாடு, தமிழகத்தின் மாநில விலங்காகும்.
இதன் இனத்தை பாதுகாப்பதற்காக, நீலகிரி வரையாடு திட்டத்தை, பல்வேறு உத்திகள் வழியே செயல்படுத்த, அரசு முடிவு செய்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்., 7ம் தேதியை 'வரையாடு தினம்' என அனுசரித்தல், வரையாடு குறித்து பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன.
இதன் வழியாக, வரையாடுகள் இனம் அழிவில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இத்திட்டங்களை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த, 25.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு கூறியதாவது:
நீலகிரி வரையாடு, அழிந்து வரும் இனம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கைபடி, வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
அன்னிய களைச்செடிகளின் ஆக்கிர மிப்பு, காட்டுத் தீ, சுற்றுச்சூழல் தரவு காரணமாக, வரையாடு இன எண்ணிக்கை குறைந்துள்ளது.
![]() |
தற்போது, தமிழகம் மற்றும் கேரளா பகுதியில், சில சிதறிய வாழ்விடப் பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.
நீலகிரி வரையாடு திட்டம் வழியாக, இவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்படும்.
அவற்றுக்கு உரிய வாழ்விடங்களில், இந்த இனங்கள் மீள் அறிமுகம் செய்யப்பட்டு, அவை வாழ ஏதுவான சூழல் உருவாக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.



