மாணவியரிடம் ஆட்டம் போட்டு ஆபாச பேச்சு அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’
மாணவியரிடம் ஆட்டம் போட்டு ஆபாச பேச்சு அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’
UPDATED : நவ 13, 2026 09:57 PM
ADDED : நவ 13, 2026 09:54 PM
சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, அழகப்பம்பாளையம்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி, முதுகலை இயற்பியல் ஆசிரியர் விஜயகுமார், 45. இவர், பள்ளி நேரத்தில் மாணவியரிடம் அநாகரிகமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) எல்லப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு, தலைமை ஆசிரியர் பால்ராஜ் புகார் தெரிவித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது.
இதனால், சங்ககிரி மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, கடந்த, 1ல் வழக்குப்பதிந்து விசாரணை நடக்கிறது.
அதேபோல் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தகுமாரி(இடைநிலை) தலைமையில் விசாரணை நடத்த, சி.இ.ஓ., எல்லப்பன் உத்தரவிட்டார். வசந்தகுமாரி, பள்ளி மாணவியர், ஆசிரியர்களிடம் விசாரித்து அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதன்படி ஆசிரியர் விஜயகுமாரை, ‘சஸ்பெண்ட்’ செய்து, சி.இ.ஓ., எல்லப்பன், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதுகுறித்து, கல்வி அலுவலர்கள் கூறியதாவது:
விஜயகுமார், வகுப்பறையில் சினிமா பாடல்களை பாடி ஆபாசமாக பேசியதோடு, மாணவியரின் உடலமைப்பு குறித்து வர்ணித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே ஏற்காடில் இருந்தபோதும், இதேபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, இடமாறுதலாகி வந்தார். தற்போது மீண்டும் பிரச்னையில் சிக்கி, சஸ்பெண்ட் ஆகியுள்ளார். இருப்பினும், இந்த விவகாரத்தில் புகார் அளித்தது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதில் முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதால், அதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, தலைமை ஆசிரியர் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் உமா சங்கரிடம் விளக்கம் கேட்டு, ‘17ஏ’ விதியில், ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
