தேசிய கராத்தே போட்டியில் தங்கம் அரசு பள்ளி மாணவி நித்திலா சாதனை
தேசிய கராத்தே போட்டியில் தங்கம் அரசு பள்ளி மாணவி நித்திலா சாதனை
ADDED : டிச 18, 2024 10:50 PM

சென்னை:பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் நடந்த, 68வது தேசிய கராத்தே போட்டியில், சென்னை அரசு பள்ளி மாணவி நித்திலா, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் நித்திலா, 11. அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
மாநில அளவில், காரைக்குடியில் நடந்த, பள்ளிக்கல்வி குழும விளையாட்டு போட்டிகளில், 46 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இதில் மொத்தம் 252 பேர் போட்டியிட்டனர். நான்கு சுற்று போட்டியிலும் முன்னிலை பெற்று, நித்திலா தங்கப்பதக்கம் வென்றார்.
இதனால், இந்திய பள்ளிக்கல்வி குழுமத்தின், தேசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றார். பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில், இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில், தற்போது நடந்துவரும் 68வது தேசிய கராத்தே போட்டிக்கு, தமிழக அணியின் தலைவியாக பொறுப்பேற்று, அணிவகுப்பில் பங்கேற்றார்.
இவர் முதல் சுற்றில், தெலுங்கானா, இரண்டாம் சுற்றில் ஹரியானா, மூன்றாம் சுற்றில் அசாம் மாநில வீராங்கனையரை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் நுழைந்தார்.
அதில், பஞ்சாப் வீராங்கனையை 8 - 2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றார். இதன் வழியே, தமிழகத்திற்கும், அரசு பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.