ADDED : டிச 03, 2024 11:35 PM
சென்னை:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன், தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், நேற்று பேச்சு நடத்தினர்.
விழுப்புரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 1,500க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவாக செய்தி வெளியானது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்க தலைவர் அம்மன் கே.கருணாநிதி கூறியதாவது:
சிறு தொழில் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் விபரங்களை அதிகாரிகள் விரிவாக கேட்டறிந்தனர். அவர்களிடம், ஒரு நிறுவனத்திற்கு, 1 லட்சம் ரூபாய் முதல் பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரணம் வழங்குமாறு வலிறுத்தப்பட்டது.
மேலும், இயல்பு நிலை திரும்ப ஆறு மாதங்களுக்கு மேலாகும் என்பதால், அதுவரை வங்கிகளில் வாங்கிய கடனுக்கான வட்டியை, அரசு செலுத்த வேண்டும் என்றும், மின் இணைப்பிற்கு கிலோ வாட்டிற்கு வசூலிக்கப்படும் மின்சார நிலை கட்டணத்தை, ஆறு மாதங்களுக்கு வசூலிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்ற அதிகாரிகள், அதை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.