தமிழகம் முழுதும் விரிவடைகிறது அரசு போக்குவரத்து குழும சேவை
தமிழகம் முழுதும் விரிவடைகிறது அரசு போக்குவரத்து குழும சேவை
ADDED : ஏப் 22, 2025 04:22 AM

சென்னை: சென்னை பெருநகரில் மட்டும் செயல்படும், 'கும்டா' எனப்படும் அரசு போக்குவரத்து குழும சேவைகளை, தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையை, 2006ல் மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் ஏற்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
முதல் கட்டமாக தமிழக அரசு, சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்துக்கான சட்டத்தை, 2010ல் நிறைவேற்றியது. 'கும்டா' எனப்படும் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், 2010ல் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது, தனி அலுவலகம் அமைப்பது தொடர்பான எந்த பணிகளும் நடக்காததால், 10 ஆண்டுகளாக இக்குழுமம் முடங்கியது. கடந்த, 2021க்கு பின் தனியான நிர்வாக அமைப்புடன், இக்குழுமம் செயல்பட துவங்கியது.
பாராட்டு
குறிப்பாக, முதல்வரை இதன் தலைவராக நியமித்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நிர்வாக அமைப்பில் காணப்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டன. இதையடுத்து, பல்வேறு துறைகளில் இருந்து அயல் பணி அடிப்படையில் அதிகாரிகளும், ஒப்பந்த முறையில் வல்லுனர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரின் தற்போதைய எல்லை மட்டுமல்லாது, விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிக்கும் சேர்த்து, போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டங்களை, இக்குழுமம் உருவாக்கி உள்ளது.
இது மட்டுமல்லாது, பல்வேறு துறைகளின் போக்குவரத்து கட்டமைப்பு திட்டங்களை ஒருங்கிணைப்பதில், இக்குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக, வாகன நிறுத்துமிட கொள்கை, ஒரே டிக்கெட்டில் பல்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துதல் போன்ற விஷயங்களில், இக்குழுமம் புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இக்குழும செயல்பாடுகள், மத்திய அரசின் பாராட்டுதலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களிலும், போக்குவரத்து சார்ந்த பிரச்னைகள் அதிகமாக உள்ளன. எனவே, இந்நகரங்களுக்கு முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து குழுமம் அதில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சாத்தியமா?
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை பெருநகரில் துவங்கப்பட்ட போக்குவரத்து குழுமத்தின் செயல்பாடு, பல்வேறு நிலைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது, பிற நகரங்களுக்கும் தேவைப்படுகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்கப்படும் நிலையில், அதில் போக்குவரத்து சார்ந்த விஷயங்களுக்கு, 'கும்டா'வின் ஆலோசனை பெறப்படுகிறது.
இந்த பின்னணியில், பிற நகரங்களில் தனித்தனியாக போக்குவரத்து குழுமங்களை ஏற்படுத்துவதா அல்லது ஏற்கனவே துவங்கப்பட்ட குழுமத்தின் அதிகார எல்லையை விரிவுபடுத்துவதா என்று, ஆராய்ந்து வருகிறோம்.
இதனால், மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில், போக்குவரத்து சார்ந்த திட்டமிடல் பணிகளின் தரத்தை மேம்படுத்த முடியும். முதல்வர் தலைமையிலான குழும கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.