ஹிந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் அரசு: அர்ஜூன் சம்பத்
ஹிந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் அரசு: அர்ஜூன் சம்பத்
ADDED : டிச 26, 2024 05:46 AM

மதுரை : பிராமணர்கள் பாதுகாப்பு, சனாதன ஹிந்து தர்ம பாதுகாப்பை வலியுறுத்தியும் ஹிந்து சமயத்திற்கு எதிராக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும் ஜன.,5 மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளதாக ஹிந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர்அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சனாதன தர்மத்தையும் பிராமண சமுதாயத்தினரையும் இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். அதை தடை செய்வதோடு பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும். பி.சி.ஆர்., சட்டத்தில் பிற ஜாதியினர் கேலி செய்தால் உடனடியாக அச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
அதே நேரத்தில் பிராமணர்களை மடிசார், மாமி, அவாள், இவாள் என்று கேலி செய்வதை யாரும் கண்டுகொள்வதும் இல்லை, நடவடிக்கை எடுப்பதும் இல்லை.
டிச.,3ல் சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடந்த போது அதில் பேசிய கஸ்துாரியின்பேச்சை திரித்து வெளியிட்டதோடு அவரை தீவிரவாதியை போல விரட்டிச்சென்று தமிழக அரசு கைது செய்தது. ஆனால் ஐயப்பனைப் பற்றி தவறாகபாடிய கானா பாடகி இசைவாணியின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஈஷா யோகா மையம் தொடர்பாக அவதுாறு பரப்பி வரும் நக்கீரன் கோபாலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்து மக்கள் கட்சி இளைஞரணி நிர்வாகி ஓம்கார்பாலாஜியை கைது செய்தது தமிழக அரசு.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் தரும் தமிழக அரசு அதே தீவிரவாதத்தை எதிர்த்து பேரணி நடத்தினால் அனுமதி மறுத்து கைது செய்து வழக்கு பதிவு செய்கிறது. தொடர்ந்து ஹிந்து சமயத்திற்கும் தேசத்திற்கும் எதிராக செயல்படுகிறது தமிழக அரசு.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் 8 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.தமிழக அரசு அனுமதித்திருந்தால் அவர்களுக்கு மானியம் கிடைத்து வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கும்.
அதே திட்டத்தை ஜாதி ரீதியிலான அணுகுமுறை என்று கைவிட்டு கருணாநிதி கைவினைஞர்கள் திட்டம் என பெயரை மாற்றி செயல்படுத்துகிறது. சனாதனத்தை அழிப்போம் என கூறிக் கொண்டே ஹிந்துகளுக்கு விரோதியில்லை என்கின்றனர். பிராமணர்களையோ ஹிந்து சமயத்தையோ யாராவது இழிவுபடுத்தினால் அரசு கேட்பதில்லை.
இதை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஜன.,5ல் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும். தென்னிந்திய பார்வர்டு பிளாக், ஹிந்து மக்கள் கட்சி, நாத்திக எதிர்ப்பு முன்னணி இணைந்து நடத்துகின்றன. அனைத்து பிராமணர் சமூகத்தினரும் கலந்து கொள்கின்றனர் என்றார்.