ADDED : டிச 24, 2024 07:10 AM
சிவகங்கை : அரசாங்கத்தை கவர்னர் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதால் அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் போக்கு தொடர்கிறது என்று சிவகங்கையில் எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை சொன்னால் சொர்க்கத்திற்கு போக முடியாது. கடவுள் பெயரை சொன்னால் சொர்க்கத்திற்கு போகலாம் என்றார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் பெயரை சொன்னால் சொர்க்கம் கிடைக்காது என்ற மனுஸ்மிருதியின் கருத்தை பிரதிபலிக்கிறார். இதை திரித்துக்கூற காங்., கட்சிக்கு அவசியம் இல்லை.
எனவே அமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்., கட்சி இது குறித்து தொடர் போராட்டங்கள் நடத்தும். தமிழகத்தில் உள்ள கவர்னர் வடகிழக்கு மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அங்கிருந்து இங்கு அனுப்பப்பட்டார். இங்கு வந்தும் அவர் மாறவில்லை. அரசியல் சாசன கோட்டின் எல்லையை மீறுகிறார்.
இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு உள்ளது. அரசை கவர்னர் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதால் அரசுடன் மோதல் போக்கு தொடர்கிறது. உண்டியலில் விழுந்த பொருட்கள் கோவிலுக்கு சொந்தமானது என்ற கோட்பாடு உள்ளது. ஆனால் அதில் நிறைய டேட்டா இருக்கும். ஆகையால் அலைபேசிக்கான விலையை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்திவிட்டு போனை கொடுத்து இந்த பிரச்னையை முடித்து விடலாம் என்றார்.