பல்கலை தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி நீக்கம்: தமிழக அரசு மீது கவர்னர் குற்றச்சாட்டு
பல்கலை தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதி நீக்கம்: தமிழக அரசு மீது கவர்னர் குற்றச்சாட்டு
UPDATED : டிச 20, 2024 08:49 PM
ADDED : டிச 20, 2024 08:21 PM

சென்னை: ''அண்ணா, பாரதிதாசன், பெரியார் பல்கலைகளில் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி., பிரதிநிதியை வேண்டுமென்றே தமிழக அரசு நீக்கி உள்ளது,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
அமைச்சர் பதில்
'பல்கலை தேடுதல் குழுவில், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., பிரதிநிதியையும் நியமிக்க வேண்டும், ' என தமிழக அரசுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தி இருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், 'கவர்னர் ரவி சட்டத்தை தன் கையில் எடுத்து செயல்படும் போக்கை அரசு கவனித்துக் கொண்டு இருக்கிறது,' எனக்கூறியிருந்தார்.
கட்டாயம்
இதனைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை ஆகியவற்றிற்கு, துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை கவர்னர் அமைத்தார். இக்குழுவில் அண்ணா பல்கலைக்கான தேடுதல் குழுவில், வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசு மற்றும் பல்கலை சிண்டிகேட் பிரதிநிதி, யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றனர்.
பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலையில் தமிழக அரசு, செனட் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதி, யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். தேடுதல் குழுவில் யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி இடம்பெறுவது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கட்டாயம். நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
முக்கியம்
ஆனால், தமிழக அரசு வேண்டும் என்றே யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியை விட்டுவிட்டு தேடுதல் குழுவை அமைத்து உள்ளது. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுவதாகும். ஆனால், உண்மைகளை திரித்து அமைச்சர் தவறாக வழிநடத்துகிறார். யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்படும் தேடுதல் குழுவை நீதிமன்றங்கள் நிராகரிக்கக்கூடும். பல்கலை மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் துணைவேந்தர்களின் பங்கு முக்கியமானது. மாணவர்களின் நலன் கருதி, துணைவேந்தர் பதவியை காலியாக வைக்கக்கூடாது.
தேடுதல் குழுவை அமைப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும். யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதியுடன் கவர்னர் அமைத்த தேடுதல் குழுவை அமைப்பதற்கான உத்தரவை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் மாளிகை கூறியுள்ளது.