ADDED : ஆக 15, 2026 06:29 AM

சென்னை: கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், கேரளா செல்வதால், சுதந்திர தினத்தையொட்டி, கவர்னர் மாளிகையில் நடத்தப்படும் தேநீர் விருது ரத்து செய்யப் பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, மாலை நேரத்தில் கவர்னர் மாளிகையில், தேநீர் விருந்து நிகழ்ச்சி நடக்கும்.
இதில், மாநில முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஐகோர்ட் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பர்.
விருந்தில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் நிலவியதால், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கவர்னர் தேநீர் விருந்தை பு றக்கணித்து வந்தன. அதேநேரம், அ.தி.மு.க., - பா .ஜ., போன்ற எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. தற்போது, தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் விஜய், சுதந்திர தினத்தையொட்டி, முதல் முறையாக இன்று புனித ஜார்ஜ் கோட்டையில், தேசியக்கொடி ஏற்ற உள்ளார்.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, கவர்னர் மாளிகையில் நடத்தப்படும் தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், தமிழகத்திற்கு பொறுப்பு கவர்னராகவே செயல்படுகிறார்.
கேரள மாநில முழு நேர கவர்னராக உள்ளார். இன்றைய தினம் கேரளா கவர்னர் மாளிகையில், தேநீர் விருந்து அளிக்க உள்ளதால், தமிழகத்தில் தேநீர் விருந்து ரத்து செய்யப் பட்டுள்ளது.
