'பிஎச்.டி., முடித்தவர்களால் போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியல' கவர்னர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
'பிஎச்.டி., முடித்தவர்களால் போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியல' கவர்னர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : ஏப் 26, 2025 01:31 AM

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவனில் பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு நேற்று துவங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநாட்டில், தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து பேசியதாவது:
நம் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, இங்கு நான்காவது முறையாக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. எதற்காக இதை நாம் செய்கிறோம் என்பதை துணை ஜனாதிபதிக்கு விளக்கமாகக் கூறுகிறேன். 2021ல் ஒரு வேந்தராக நான் பல்கலைக்கு சென்றேன்.
அங்கு, பிஎச்.டி., முடித்த மாணவர்களை சந்திக்க நேரிட்டது. தங்கப்பதக்கம் வாங்கிய அவர்களிடம் நான் பேசும்போது, அவர்களின் விளக்கம் ரொம்ப குறைவாக இருந்தது.
மேலும் அவர்கள், ஒரு சாதாரண வேலையில் போய் சேர்ந்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருந்தனர். அப்போதுதான், நம் கல்வித்தரம் எவ்வாறு உள்ளது என்பது எனக்கு புரிந்தது.
மாநிலத்தில், தனியார் பள்ளிகளின் தரம் உயர்ந்திருந்தது; அதேவேளையில், அரசு பள்ளிகளின் தரம் தாழ்ந்திருந்தது. பள்ளி மாணவர்கள் 2ம் வகுப்பு புத்தகத்தைக்கூட படிக்காத நிலையில் இருந்தனர்.
பெரும்பாலான மாணவர்கள் ஒன்று முதல், 99 வரையிலான எண்களைக் கூட சரியாக சொல்ல முடியவில்லை. இது, ஒரு புறம் இருக்க, பல்கலைகளிலும் சில பிரச்னைகள் இருந்தன.
தமிழக உயர்கல்வித்துறை, தேசிய சராசரியை விட, 50 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 6,500 பிஎச்.டி., முடித்த மாணவர்கள் வெளியே வருகின்றனர்.
ஆனால், அதில் ஒரு சதவீதம் கூட போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நிலையில் உள்ளனர். ஏன் இந்த நிலை இங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
தரம் குறைவு
அதன்பிறகு தான், இதுபோன்ற மாநாடுகளை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைகள் சிறப்பாக செயல்படுகின்றன. அதே வேளையில், அரசு பல்கலைகளின் தரம் குறைவாகவே உள்ளது.
ஒரு காலத்தில் சென்னை பல்கலைக்கழகம், நாட்டிலேயே ஐந்தாவது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது அது இல்லை. இப்படி பல்கலைகளின் தரம் குறைந்து வருவதால், சமுதாயத்திலும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
இந்த ஏற்றத்தாழ்வு தொடர்ந்ததால் தான், 2022ல் இத்தகைய மாநாட்டை துவக்கி வைத்தோம். இதன்பிறகு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.
இன்றைய மாநாட்டில் பல தொழில்துறை சார்ந்தவர்கள், வல்லுநர்கள் வந்துள்ளனர். அவர்கள் மாணவர்களுடைய கல்வித்தரம், வாழ்க்கை உயர்வு குறித்து வழிகாட்ட உள்ளனர்.
கல்வியின் தரத்தை உயர்த்தும் இதுபோன்ற மாநாட்டில் அரசியலை புகுத்தக்கூடாது. இங்கு வந்துள்ள அனைவருக்கும், என் வாழ்த்துகள். துணை ஜனாதிபதி எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து அறிவுரை வழங்குவார். அவருக்கு நன்றி.
இவ்வாறு பேசினார்.
ஐந்து பேர் வரவில்லை
தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில், 13ல் துணைவேந்தர்கள் இல்லாததால், யாரும் பங்கேற்கவில்லை. ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர்கள் வரவில்லை. ஊட்டிக்கு வந்த இரு துணைவேந்தர்கள், சில காரணங்களால் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.
ஆனாலும், பங்கேற்காத சரியான பல்கலை துணைவேந்தர்கள் பட்டியலை, மாநாட்டில் இருந்த ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிடவில்லை.