சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் தீண்டாமை உள்ளது: கவர்னர் ரவி
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் தீண்டாமை உள்ளது: கவர்னர் ரவி
UPDATED : பிப் 21, 2025 06:10 AM
ADDED : பிப் 20, 2025 09:15 PM

சென்னை: ''சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும், தீண்டாமை இருப்பது வேதனை அளிக்கிறது; தீண்டாமையை தடுக்க, மாணவர்கள் துணிவுடன், அதை எதிர்த்து நிற்க வேண்டும்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரியில், மாலை கல்லுாரி பிரிவின், 50ம் ஆண்டையொட்டி, 'சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள்' குறித்த, இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லுாரியில் நேற்று துவங்கியது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ரவி பேசியதாவது:
சமூகப் பணிகள் என்றால், சுவாமி விவேகானந்தரின் சேவைகள்தான் நினைவுக்கு வரும். சமூக சேவை என்பது அறக்கட்டளை அல்ல. எந்த எதிர்பார்ப்பும், தன்னலமும் இல்லாமல், சேவை செய்ய வேண்டும். அதைத்தான் விவேகானந்தர் செய்தார். அவர் சிறந்த மனிதர். ஆங்கிலேயர் ஆட்சியில், நம் கலாசாரம், பண்பாடு, தத்துவத்தை அழித்தனர். நம் நாடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
ஆன்மிகப் பண்பாடு, அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இந்தியா என்பது ஒரே குடும்பம்; ஒரே தேசம். விவேகானந்தரின் குறிக்கோளை, நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தேசத்தின் சொத்து. மாணவர்களின் வளர்ச்சி தேசத்திற்கானது. சுதந்திரத்திற்கு பின், ஒவ்வொரு நாளும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், அனைவருக்குமான வளர்ச்சியை நோக்கி, பிரதமர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும், நாட்டில் தீண்டாமை இருப்பது வேதனை அளிக்கிறது. தீண்டாமையை தடுக்க, மாணவர்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும். அதை ஒழிக்க, மாணவர்களும், சமூகமும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தேசிய துாய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, விவேகானந்தா கல்லுாரி செயலர் சுவாமி த்யானகம்யானந்தா, சுவாமி சுரார்சிதானந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.