கலைஞர் பல்கலை மசோதா; ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ரவி
கலைஞர் பல்கலை மசோதா; ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ரவி
UPDATED : ஆக 06, 2025 05:41 AM
ADDED : ஆக 06, 2025 01:40 AM

சென்னை:கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை அமைக்க அனுமதிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், கலைஞர் பல்கலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இப்பல்கலையின் வேந்தராக, முதல்வர் இருப்பார். இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார். தேடுதல் குழு வாயிலாக, துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவார்.
வேந்தரின் அனுமதியின்றி கவுரவ பட்டங்களை வழங்க முடியாது. பல்கலைக்கு மத்திய, மாநில அரசுகள் வாயிலாகவும், பல்கலை மானியக்குழு வாயிலாகவும் நிதி வழங்கப்படும்.
கட்டணம், மானியம், நன்கொடை, பரிசுகள் வாயிலாக, நிதி ஆதாரங்களை பெறலாம் என, சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த சட்ட மசோதா கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னரிடம் மூன்று மாதங்களாக பரிசீலனையில் இருந்தது .
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்கலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், அந்த சட்ட மசோதாவை ஜனாதிபதி முர்முவின் ஒப்புதலுக்கு, கவர்னர் ரவி அனுப்பி வைத்துள்ளார்.