அரசியலுக்காக வன்மத்தை பதிவிட்ட கவர்னர்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரசியலுக்காக வன்மத்தை பதிவிட்ட கவர்னர்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
UPDATED : ஜன 22, 2024 03:45 PM
ADDED : ஜன 22, 2024 03:44 PM

சென்னை: ''அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார். இதற்கு அரசியலே காரணம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.,வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இதில் தலைநகரம் டில்லி முதல் தமிழகத்தில் உள்ள பா.ஜ.,வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.
வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி
ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி மட்டுமல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது.
அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.,வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.,வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நியமன பதவியில் உள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, கோதண்டராமர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார். கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கவர்னர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!
பக்தியா? பகல் வேடமா?
தமிழக மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல், காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பா.ஜ., தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் கோயிலில் போய் கவர்னர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?
உண்மையான பக்தர்கள்
தமிழகத்தின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள், ஈ.வெ.ரா.,வின் தத்துவங்களையும் போற்றுவார்கள், பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள்.
இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற திமுக.,வின் அரசியல் எதிரிகளும், தமிழகத்தின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், திமுக.,வின் தொண்டர்கள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.