கவர்னரின் தேநீர் விருந்து: அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
கவர்னரின் தேநீர் விருந்து: அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ADDED : ஆக 15, 2024 05:34 PM

சென்னை: கவர்னர் ரவி அழைப்பின்பேரில் அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று மாலையில் கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (ஆக.,15) தேநீர் விருந்து அளித்தார். இதற்காக, திமுக, அதிமுக, பா.ஜ., தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், முக்கிய அமைப்புகளுக்கும் கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. ஆனால், திமுக கட்சி சார்பில் புறக்கணித்தாலும், அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாமக சார்பில் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.