கவர்னர் தேநீர் விருந்து: காங்., - கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு
கவர்னர் தேநீர் விருந்து: காங்., - கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு
ADDED : ஜன 25, 2024 07:38 AM

சென்னை: குடியரசு தினத்தன்று கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
சென்னை கவர்னர் மாளிகையில் நாளை நடக்கும் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறுகையில் ''சுதந்திரத்திற்காக போராடிய காந்தியை கவர்னர் அவமதித்து விட்டதால் அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் கூறுகையில் ''காரல் மார்க்சை சிறுமைப்படுத்தி பேசியதுடன் தேசத் தந்தையாக ஏற்கப்பட்ட காந்தியையும் அவதுாறாக பேசியுள்ள கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருந்தை புறக்கணிக்கிறோம்'' என்றார்.