மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் கவர்னர் வழிபாடு
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் கவர்னர் வழிபாடு
UPDATED : மே 24, 2024 03:47 PM
ADDED : மே 24, 2024 12:36 PM

சென்னை: திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (மே 24) வழிபாடு செய்தார்.
உலகப்பொதுமறையான திருக்குறளை தந்து, தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாப்பூரில் 400 ஆண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் கோயிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
இந்த ஆண்டு வைகாசி அனுஷம் தினம் மற்றும் திருவள்ளுவர் திருநாள் இன்று (மே 24) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அவரை கோயில் செயல் அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். திருவள்ளுவர் சிலைக்கு தீப ஆராதனை செய்யப்பட, கவர்னர் ரவி வழிபட்டார்.
காவி உடையில் திருவள்ளுவர்
திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர் ரகுபதி கூறும்போது,
ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் கவர்னரை என்னதான் செய்ய முடியும்? வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்துக்கு மருந்தில்லை என்றார்.
ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: திருவள்ளுவரைப் பொறுத்த வரையில் ஜாதி கிடையாது, மதம் கிடையாது, இனம் கிடையாது. அப்படி இருக்கின்ற ஒருவரை காவி உடையுடன் சித்தரிப்பது ஏற்க முடியாது. தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? தமிழினத்தையும் திருவள்ளுவரையும் அவமானப்படுத்தும் விதமாகதான் கவர்னரின் செயலை பார்க்க முடிகிறது. கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.