ஆதி திராவிடருக்கு இலவச வீட்டுமனை பட்டா வருவாய் துறைக்கு அரசு உத்தரவு
ஆதி திராவிடருக்கு இலவச வீட்டுமனை பட்டா வருவாய் துறைக்கு அரசு உத்தரவு
ADDED : நவ 04, 2024 03:10 AM

மதுரை: தமிழகத்தில் ஆதி திராவிடர்களுக்கான காலிமனைகளை கண்டறிந்து, தகுதியானவர்களை தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தயார் செய்து ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படாமல் விடுபட்டுப் போன வீட்டுமனை பட்டாக்களும் உள்ளன.
அவற்றை மீண்டும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கும் வகையில், ஆய்வு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் வருவாய் அலுவலர்கள் இடம் பெற்ற குழு அமைக்கும் படியும், அக்குழு வீட்டுமனைகளை நுாறு சதவீதம் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளனர்.
இதற்கான சுற்றறிக்கையை வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து தாசில்தார்களுக்கும் அனுப்பிஉள்ளனர்.
இப்பணியில் தாசில்தார்கள், 50 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நல அலுவலரான தனி தாசில்தார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி தாசில்தார் ஆகியோர் மீதியுள்ள 50 சதவீத ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை தாசில்தார்கள் ஆகியோரைக் கொண்டதாக குழு அமைக்கப்பட வேண்டும் என, உத்தரவிட்டுஉள்ளனர்.