ADDED : பிப் 11, 2024 12:11 AM

''சுவத்துல அடிச்ச பந்தா திரும்பி வந்து, வசூல்ல புகுந்து விளையாடுதாரு வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலக ஊழியர் ஒருத்தர், இங்கனயே பல வருஷமா பெஞ்ச் தேய்ச்சு, வசூல்ல முக்குளிச்சிட்டு இருந்தாரு... போன வருஷ கடைசியில, இவரை, அஞ்சூர் ஆபீசுக்கு மாத்தினாவ வே...
''ஆனா, சிங்கபெருமாள் கோவில் ஆபீஸ்ல ஊழியர்கள் பற்றாக்குறைன்னு சொல்லி, ரெண்டே மாசத்துல, 'டைவர்சன்' பணின்னு மறுபடியும் இங்கனயே வந்துட்டாரு... புது மின் இணைப்புக்கு, 'ஆன்லைன்ல' மக்கள் பணம் கட்டினாலும், அவங்களை கூப்பிட்டு, 'அதிகாரிகளுக்கு தரணும்'னு, 5,000 ரூபாய் வரை வசூலிச்சிடுதாரு வே...
''புதுசா செய்ற எந்த பணிக்கும், 'எஸ்டிமேட்'டே தயாரிக்காம, இஷ்டத்துக்கு செலவு பண்ணுதாரு... இதுக்கு இடையில, காலியிடங்களுக்கு ஊழியர்கள் வந்துட்டாலும், மறுபடியும் அஞ்சூருக்கு போகாம, இதே ஆபீஸ்லயே இருக்காரு...
''இதனால, 'அவருக்கு உயர் அதிகாரிகள் சப்போர்ட் இருக்கிறதால, இப்படி ஆட்டம் போடுதாரு'ன்னு, சக ஊழியர்களே புலம்புதாவ
வே...'' என்றார், அண்ணாச்சி.
''கார்த்தாலயே சரக்கு விற்பனை கனஜோரா நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எல்லா ஊர்லயும் தான் நடக்கு... நீரு எந்த ஊரை சொல்லுதீரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''தலைநகர் சென்னையில தான் ஓய் இந்த அநியாயம்... ராத்திரி 10:00 மணிக்கு, 'டாஸ்மாக்' கடைகளை மூடிடறாளே...
''சாலிகிராமம், விருகம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி பகுதிகள்ல, 10:00 மணிக்கு கடைகளை மூடிட்டாலும்,
'குடி'மகன்களுக்கு நடுஜாமம் வரைக்கும், டாஸ்மாக் கடைகளுக்கு பக்கத்துலயே தாராளமா சரக்கு விற்பனை பண்றா ஓய்...
''அதே மாதிரி, கார்த்தால 7:00 மணிக்கே இந்த பகுதிகள்ல, தட்டுப்பாடு இல்லாம மது கிடைக்கறது... இதனால, கார்த்தால வேலைக்கு கிளம்பற இளைஞர்கள் சிலர், இதை வாங்கி குடிச்சிட்டு,
அங்கங்க மட்டையாகி படுத்துடறா ஓய்...
''இது சம்பந்தமா, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ரத்த தானம் பண்ண வர்றவங்களை அலைய விடுறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கு, ரத்த தானம் தர வர்றவங்களை, 'நர்ஸ்கள், கிராமங்கள்ல நடக்கிற ரத்த தான முகாமுக்கு போயிருக்காங்க... நாளைக்கு வாங்க'ன்னு சொல்லி அனுப்பிடுறாங்க...
''அப்படியே, மக்கள்அலைஞ்சு திரிஞ்சு ரத்தம் கொடுத்தாலும், அவங்களுக்கு ஜூஸ், பிஸ்கட்னு எதுவும் தரமாட்டேங்கிறாங்க... அதுக்குன்னு அரசு ஒதுக்குற பணத்தை, 'ஆட்டை' போட்டுடுறாங்க...
''கிராமங்கள்ல முகாம் நடத்தி சேகரிக்கிற ரத்தத்தை, பக்கத்துல இருக்கிற அரியலுார், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி, பெரம்பலுார் ரத்த வங்கி அலுவலர்கள் நல்ல பேர் எடுத்துடுறாங்க...
''அதே நேரம், இங்க சிகிச்சைக்கு வர்ற நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்பட்டா, நோயாளிகளின் உறவினர்கள் தான் ஏற்பாடு செய்து தரணும் அல்லது தனியார் ரத்த வங்கியில போய் வாங்கிட்டு வாங்கன்னு விரட்டி விடுறாங்க...'' என முடித்தார்,