அரசு வேலையில் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் : மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு வேலையில் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் : மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 30, 2011 04:27 AM
குன்னூர் : 'திருநங்கைகளுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் வழங்க வேண்டும்' என, திருநங்கைகள் மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குன்னூர் அருகே வெலிங்டன் ஐ.எம்.ஏ., அரங்கில், திருநங்கைகள் நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்: வாடகை வீடுகளில் வசிக்கும் திருநங்கைகளுக்கு குடியிருப்பு, ரேஷன் கார்டு, அடையாள அட்டை உட்பட அரசு சலுகைகளை வழங்க வேண்டும்; மாநிலத்தில் உள்ள பட்டதாரி திருநங்கைகளுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் வழங்க வேண்டும்; படிக்காத திருநங்கைகள் சுய தொழில் துவங்க, வங்கிக் கடன் வழங்க வேண்டும்; குழு அமைத்து செயல்படும் திருநங்கைகளுக்கு தேவையான வங்கிக் கடன் உட்பட உதவி வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பு அழைப்பாளரான, யுவபரிவர்தன் தொண்டு அமைப்பின் நிர்வாக அறங்காவலர் இந்திரா கொய்தாரா பேசுகையில், ''திருநங்கைகளை கொண்டு குழு அமைத்து, அவர்களின் வாழ்வாதாரம் உயர முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
குன்னூர் தாசில்தார் ஜாபர் அலி பேசுகையில், ''அரசு விதிகளுக்கு உட்பட்டு, திருநங்கைகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்,'' என்றார். சர்வதேச மனித உரிமைகள் கழக மாநில நிர்வாகி சலீம் பேசினார். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளை ஒருங்கிணைத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மனோ தலைமை வகித்தார். நூரி, ரோஜா, நிஷா, பத்ரா முன்னிலை வகித்தனர். மனித உரிமைகள் கழக மாநில அமைப்பாளர் (வடக்கு) அஸ்மத், கல்விப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.