அரசு அதிகாரிகள் இழுத்தடிப்பு: பசுமை தீர்ப்பாயம் கொந்தளிப்பு
அரசு அதிகாரிகள் இழுத்தடிப்பு: பசுமை தீர்ப்பாயம் கொந்தளிப்பு
ADDED : செப் 22, 2024 02:55 AM

சென்னை: பலமுறை உத்தரவிட்டும் அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் செய்யும் அரசு அதிகாரிகள் மீது, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முதலியார்குப்பம் முகத்துவாரம் அருகே, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய அனுமதி பெறாமல், சுற்றுலா வளர்ச்சி கழகம், கழிப்பறைகள், குடில்கள், கான்கிரீட் துாண்கள், சுற்றுச்சுவர்களை கட்டுகிறது. இந்த சட்ட விரோதமான கட்டுமானங்களை தடுக்க உத்தரவிடக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், முதலியார்குப்பம், பரமன்கேணி பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டலமான சி.ஆர்.இசட்., வரம்புக்குள் வரும் முகத்துவார பகுதியை ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டியவர்களின் முழு அஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தீர்ப்பாயம் உத்தரவிட்டும், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பலமுறை உத்தரவிட்டும் செங்கல்பட்டு கலெக்டர், நகர ஊரமைப்புத் துறை மற்றும் உள்ளூர் திட்டமிடல் இயக்குனரகம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும். அரசு தரப்பு வழக்கறிஞர் நான்கு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளார். அதற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 15ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.