ஊக்கத்தொகை தருவதில் பாரபட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் கொதிப்பு
ஊக்கத்தொகை தருவதில் பாரபட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் கொதிப்பு
ADDED : ஏப் 11, 2025 01:02 AM
சென்னை:அரசு தேர்வுகள் இயக்ககம், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம், பாரபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள், 15ம் தேதி முடிய உள்ளன.
குற்றச்சாட்டு
இந்நிலையில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் பணியிலும், ஊக்க ஊதியத்திலும், தேர்வுத்துறை பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுஉள்ளன.
அதே சலுகைகளை, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
இந்த ஆண்டு முதல் செயல்படுத்துவதாக, அரசு தேர்வுகள் துறை தெரிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்புகள் வரவில்லை.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், ஒரு முதன்மை தேர்வாளரின் கீழ், ஆறு உதவி தேர்வாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும், ஒரு நாளைக்கு, தலா, 24 விடைத்தாள்கள் மதிப்பீட்டுக்காக வழங்கப்படுகின்றன.
10 ரூபாய்
செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில், 90 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வுகள் உள்ள பாடங்களில், 70 மதிப்பெண்களுக்கும் விடைகள் இருக்கும்.
ஆனால், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில், ஒரு முதன்மை தேர்வாளருக்கு, 10 உதவி தேர்வாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா, 30 விடைத்தாள்கள் மதிப்பீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அறிவியல் பாடத்தில், 75 மதிப்பெண்களுக்கான விடைகள், மற்ற பாடங்களில், 100 மதிப்பெண்களுக்கான விடைகள் உள்ளன.
ஆனால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஒரு நாளைக்கு, 10 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு எட்டு ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவோருக்கு வழங்கப்படும் ஊதியத்தை, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்துவோருக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.