இது உங்கள் இடம்: வடைக்கு அடிப்படை உளுந்து; தெரியுமா சீமான்?
இது உங்கள் இடம்: வடைக்கு அடிப்படை உளுந்து; தெரியுமா சீமான்?
ADDED : மார் 11, 2024 03:46 AM

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'நாங்க ரூல்ஸ்படி நடந்துக்க மாட்டோம்; ஆனால், எங்களுக்கு வர வேண்டியது வரணும்' என்ற கோட்பாடு கொண்டால், தமிழகம் எப்படி உருப்படும்?
அரிசியை வேக வைத்தால் தான் சோறு கிடைக்கும். 'அரிசியை வேக வைக்க வேண்டிய பணி என்னுடையது கிடையாது; அது தானாக சோறாக வேண்டும்' என்று நினைத்தால் நடக்கிற காரியமா?
எல்லாவற்றிலும் ஒழுங்குமுறை இருந்தால் தான், எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்ய முடியும்.
தேர்தலை நடத்துவதென்றால் அதற்கு ஒரு ஒழுங்குமுறை, விதி இருந்தால் தானே, சீராக, சரியாக நடக்கும்? அதற்கான விதிமுறைகளை செவ்வனே பின்பற்றுவதால், நம் நாடு இன்று உலகளவில் மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்ற பெயர் பெற்றிருக்கிறது.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நாட்டின் குடிமகன், தேர்தலில் போட்டியிட ஆசைப்படுகிறார் என்றால், அதற்குரிய அடிப்படை விதிமுறையை அவர் பின்பற்றினால் தானே, போட்டியிட முடியும்?
தன் கட்சிக்கு விவசாய சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுக்காமலேயே, தனக்கு சின்னம் ஒதுக்கவில்லை என்று, சீமான் என்பவர் குற்றம் சாட்டுகிறார்.
வாயால் வடை சுட்டால் மட்டும் போதாது; உளுந்தை சரியாக அரைத்து, தேவையான உப்பைப் போட்டு, சரியான பதத்தில் அரைத்து, பக்குவமாக வெங்காயம், மிளகாய் அரிந்து கலந்து, ஆரோக்கியமான எண்ணெயில் பொரித்து எடுப்பது தான், சிறந்த வடை.
இவ்வளவு பக்குவம் கொண்ட ஒரு பதார்த்தத்துக்கு, அடிப்படையானது உளுந்து என்பது கூட தெரியாமல் இருக்கும் சீமானை என்னவென்று சொல்வது?

