கடல் ஆமைகள் இறப்பு விவகாரம் அரசு அறிக்கையில் திருப்தி இல்லை பசுமை தீர்ப்பாயம் கோபம்
கடல் ஆமைகள் இறப்பு விவகாரம் அரசு அறிக்கையில் திருப்தி இல்லை பசுமை தீர்ப்பாயம் கோபம்
ADDED : ஜன 31, 2025 10:53 PM
சென்னை:'கடல் ஆமைகள் இறப்பு தொடர்பாக, தமிழக அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரையில், கடல் ஆமைகள் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கி வருவது பற்றி, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக விசாரித்த தீர்ப்பாயம், ஆமைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும், 'ட்ராலர்' எனப்படும், பெரிய வகை விசை படகுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், 'ஆந்திர மாநில கடற்கரை பகுதிகளிலும், அதிக அளவு ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிஉள்ளன.
'கடல் ஆமைகள் இறப்பை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளித்துள்ளோம்' என்றார்.
அதை தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கடல் ஆமைகள் உயிரிழப்பு குறித்து, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், முழுமையான விபரங்கள் இல்லை. கடல் ஆமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இழுவை வலைகளை பயன்படுத்தும், ட்ராலர் வகை விசை படகுகள் எத்தனை உள்ளன? அவை எந்த பகுதிகளுக்கு சென்று, மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றன என்பது குறித்து விரிவான அறிக்கையை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆந்திர கடற்கரைகளில், கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுவதால், இந்த வழக்கில் ஆந்திர அரசும், அம்மாநில வனத்துறையும் சேர்க்கப்படுகிறது.
இது தொடர்பாக, ஆந்திர அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 7ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.