அபராதம் செலுத்தாத குவாரிகள் உரிமத்தை நீட்டிக்க கூடாது: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
அபராதம் செலுத்தாத குவாரிகள் உரிமத்தை நீட்டிக்க கூடாது: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜூலை 08, 2025 01:05 AM

சென்னை: 'அபராதத்தை செலுத்தாத குவாரிகளின் உரிமத்தை நீட்டிக்கக் கூடாது' என, புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல் குவாரிகளால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது; சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
காலாவதி
எனவே, விதிகளை மீறிய கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் தீர்ப்பாயத் தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் அளித்த தீர்ப்பு:
கோவை மாவட்டத்தில் செயல்படும் ஆறு கல் குவாரிகள் விதிகளை மீறியுள்ளதாக, மோகன்குமார் தன் மனுவில் கூறியுள்ளார். சில குவாரிகளின் சுற்றுச்சூழல் அனுமதி, சுரங்க குத்தகை, சி.டி.ஓ., எனப்படும் செயல்பாட்டு அனுமதி அனைத்தும் காலாவதியாகி விட்டன.
சில குவாரிகள், குத்தகை பெற்ற பகுதிக்கு வெளியே குவாரி நடத்தியதற்காக, புவியியல் மற்றும் சுரங்கத் துறையால், 33.63 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குவாரிகளிடம் இருந்து சுரங்க குத்தகை வழங்குதல், புதுப்பித்தல், சுற்றுச்சூழல் அனுமதி, செயல்பாட்டு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்தால், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட அரசு அமைப்புகள், அவற்றை கவனமுடன் பரிசீலிக்க வேண்டும்.
விண்ணப்பித்துள்ள குவாரிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி விட்டதா அல்லது முந்தைய வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
உரிமம் கிடையாது
அபராதத்தை செலுத்தாத, வழிகாட்டுதல்களை, உத்தரவுகளை செயல்படுத்தாத குவாரிகளின் உரிமத்தை நீட்டிக்கக் கூடாது. அபராதம் வசூலிக்கப்படும் வரை, குவாரிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது. அந்த குவாரி உரிமையாளர்களுக்கு, புதிய குவாரிக்கான உரிமத்தை வழங்கக்கூடாது.
குவாரி உரிமத்தை புதுப்பிப்பதற்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் பரிசீலிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள், இதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.