தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு பச்சைக்கொடி! சபாநாயகர் ஏற்றதில் தவறில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு பச்சைக்கொடி! சபாநாயகர் ஏற்றதில் தவறில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு பச்சைக்கொடி! சபாநாயகர் ஏற்றதில் தவறில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

8


UPDATED : அக் 14, 2026 12:24 AM

ADDED : அக் 13, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:24 AM ADDED : அக் 13, 2026 09:06 PM

8


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரின் ராஜினாமாவை, சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக் கொண்டதில் தவறில்லை; அரசியல் சட்டப்படி அது செல்லுபடியாகும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் வாயிலாக, சபாநாயகரின் நடவடிக்கைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

சட்டசபையில், த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தது தொடர்பான தகுதி நீக்க விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம்- மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம்- சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர்- எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை -சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமா கடிதங்களை ஏற்று, சபாநாயகர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பிலும், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சார்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, இந்த மனுக்கள் மீதான உத்தரவு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு, உத்தரவு பிறப்பித்தது. அப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேரின் ராஜினாமா கடிதங்களை ஏற்று, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. அதேநேரத்தில், மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயகுமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நடைமுறைகளை, இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 109 பக்கங்களில் பிறப்பித்த உத்தரவு:

எந்த காரணங்களுக்கு வேண்டுமானாலும், எம்.எல்.ஏ., தன் பதவியை ராஜினாமா செய்யலாம். அது, அவர்களின் தனிப்பட்ட உரிமை. அந்த ராஜினாமாக்களுக்கு பின்னால் இருந்ததாகக் கூறப்படும் நோக்கங்கள் குறித்து, விரிவான அல்லது ஆழமான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் சபாநாயகருக்கு இல்லை.

எனவே, ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதும், அதைத்தொடர்ந்து தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதும், அரசியல் சட்டப்படி செல்லுபடியாகும். மாறாக, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., நேரில் ராஜினாமா கடிதம் அளித்தாரா, சுய விருப்பத்தின்படி அளித்தாரா என்பதை தான் விசாரிக்க முடியும்.

ராஜினாமா பின்னணியில் உள்ள உள்நோக்கம் குறித்து, சபாநாயகர் விசாரணை நடத்த முடியாது. அதன் காரணமாக, ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கருத முடியாது.

தகுதி நீக்க நடவடிக்கையை பொறுத்தவரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகாரை, அ.தி.மு.க., திரும்ப பெற்றுள்ளது. எனவே, அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை எதுவும் நிலுவையில் இல்லை. மாறாக, மீதமுள்ள நான்கு எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை, சபாநாயகர் முன் நிலுவையில் உள்ளது.

நான்கு எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா பின்னணியில், குதிரை பேரம் நடந்து உள்ளதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டாலும் கூட, தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால், ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று கூற முடியாது.

ஏனெனில், ராஜினாமா மற்றும் தகுதி நீக்கம் ஆகிய இரண்டும், தனித்தனி அரசியல் சட்ட செயல்முறைகள். தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருந்த போதிலும், அந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை, அரசியல் சட்ட விதிமீறலாகவோ, மோசடியாகவோ கருத முடியாது. ராஜினாமாவை ஏற்பதற்கு, தகுதி நீக்க நடவடிக்கை தடையாக இருக்காது. ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தகுதி நீக்க நடவடிக்கை செல்லாததாகி விடும் என்றும் கூற முடியாது.

தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக, நான்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, நான்கு மாதங்கள் கடந்து விட்டன; அதற்கு எந்தவிதமான திருப்திகரமான விளக்கங்களும் அளிக்கப்படவில்லை. எனவே, தகுதி நீக்க நடவடிக்கையை விரைந்து முடிக்க வேண்டும் என, சபாநாயகருக்கு உத்தரவிடுவது, அவரது அதிகாரத்தில் தலையிடுவதை போன்றது அல்ல.

இந்த தகுதி நீக்க நடவடிக்கையை விரைந்து விசாரணைக்கு எடுத்து, இரண்டு மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும். இந்த விசாரணையை, எந்த எம்.எல்.ஏ.,வும் தாமதப்படுத்துவதற்கு சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது. இரண்டு மாதங்களுக்குள் தகுதி நீக்க நடவடிக்கையில் முடிவெடுக்காதபட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் முடிவு, அரசியல் சட்டப்படி செல்லுபடியாகும். அதன் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிரான ராஜினாமாவை ஏற்று, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயகுமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையில், இரண்டு மாதங்களில் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

'அ.தி.மு.க.,வுக்கு நல்ல தீர்ப்பு!


''கட்சித் தாவல் புகாரை இரண்டு மாதத்துக்குள் சபாநாயகர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க.,வுக்கு நல்ல தீர்ப்பு வந்திருப்பதாக, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
ஆறு எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற விவகாரத்தில், அ.தி.மு.க.,வின் வழக்கு தள்ளுபடி என்பது தவறு; வேறு ஒரு வழக்கு தான் தள்ளுபடியாகி இருக்கிறது. தகுதி நீக்கம் நடவடிக்கையில் இருந்து ஆறு பேரும் தப்ப முடியாது. கட்சித் தாவல் புகாரை சபாநாயகர் இரண்டு மாதத்துக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
இது எங்களுக்கு கிடைத்த நல்ல தீர்ப்பு. சபாநாயகரின் உத்தரவை மறுபரிசீலனை செய்யலாம் என, உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் சொல்லி இருக்கிறது. எனவே, சட்ட ஆலோசர்களுடன் கலந்து ஆலோசித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us