ADDED : ஜூலை 17, 2025 02:51 AM
சென்னை : 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4, மறுதேர்வு நடத்த வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், சமீபத்தில் நடந்த 'குரூப் - 4' தேர்வில், தமிழ்மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள், பாடத் திட்டத்திற்கு அப்பால், மிக கடினமாக இருந்துள்ளன. தமிழ் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட, தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு கடினமான வினாக்கள் தமிழ்மொழி பகுதியில் இடம் பெற்றன. அதேநேரம், ஆங்கில பகுதி வினாக்கள் எளிதாக இருந்தன.
இதுதான், தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா? தமிழ் வழியில் படித்தவர்களை போட்டியில் இருந்து வெளியேற்றும் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகி உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், தேர்வர்களின் எதிர்காலத்தோடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், தொடர்ந்து விளையாடுவது கண்டனத்திற்குரியது. தேர்வர்களின் நலன் கருதி, குரூப் - 4 மறுதேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.