ADDED : அக் 02, 2025 06:18 PM

தடையின்றி கிடைக்கிறது என்பதாலேயே சில பொருட்களின் மதிப்பு மனித மனங்களில் உறைப்பதில்லை. இயற்கையின் அற்புத கொடையான மழையும் நீரும் அந்த ரகம் தான். அதனால் தான் ஆறுகள், ஏரிகள், குளங்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் மக்களிடம் அக்கறை இல்லாதிருந்தது.
இன்று அந்த நிலையும் மக்கள் மன நிலையும் வெகுவாக மாறியிருக்கிறது என்றால், தினமலர் தொடர்ச்சியாக மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் அதற்கு முக்கியமான காரணம் என்பதை சமூக ஆர்வலர்கள் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறார்கள்.
கோவை மண்டலத்தை எடுத்துக் கொண்டால், சிறுதுளி, கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம், கவுசிகா நீர்க்கரங்கள், ராக், அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பு என எத்தனையோ இயக்கங்கள் இன்று உயிர்ப்புடன் செயல்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பணியையும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி நீர்வளம் குறித்த விழிப்புணர்வை பர வ லாக்கியது தினமலர். எனவே தான், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்கள், அதன் நீர் நிலைகள் பாதுகாக்கப்படும் நேர்த்தியை கண்டு வியந்து போகிறார்கள்.