ஜி.எஸ்.டி., மாற்றம் வெறும் அரசியல் சீர்திருத்தம் அல்ல
ஜி.எஸ்.டி., மாற்றம் வெறும் அரசியல் சீர்திருத்தம் அல்ல
ADDED : செப் 07, 2025 01:16 AM
கடந்த 2017 ஜூலையில் ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்ட போது பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தன. ஆனால், இன்று பார்க்கும்போது, இது ஒரு முதிர்ச்சியான, தெளிவான வரி முறையாக மாறிவிட்டது. இதனால், மக்களுக்கு சேமிப்பும், மாநிலங்களுக்கு நிலையான வருவாயும், தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு பயன்களும் கிடைத்துள்ளன.
நன்மை ஆரம்பத்தில் சில மாநிலங்களுக்கு, 'ஜி.எஸ்.டி.,யால் நாங்கள் வருமானத்தை இழப்போமா?' என்று சந்தேகம் இருந்தது. ஆனால், இப்போது பார்த்தால், மஹாராஷ்டிரா, தமிழகம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஜி.எஸ்.டி.,க்கு முன்பு இருந்ததை விட அதிகமான வரி வசூலை ஈட்டுகின்றன.
வரி ஏய்ப்பு குறைந்து, வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 2.37 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மாற்றம் ஜி.எஸ்.டி.,யின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் டிஜிட்டல் நடைமுறை.
↓மின்னணு விலை பட்டியல், மின்னணு பில் வந்த பிறகு வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்பட்டு உள்ளது
↓தானியங்கி சரிபார்க்கும் நடைமுறை தவறுகளை குறைத்துள்ளது
↓விரைவில் வர இருக்கும் 'இன்வாய்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' இதை இன்னும் எளிதாக்கும்.
இந்த டிஜிட்டல் வசதிகள், சிறிய வியாபாரிகளுக்கு வரிச்சுமையை, 30 முதல் 40 சதவீதம் வரை குறைத்துள்ளன. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, 1.50 கோடியாக உயர்ந்திருக்கிறது. முக்கியமாக, 'அதிகாரிகளை சந்தித்து சமாளிக்க வேண்டும்' என்ற நிலை மாறி, வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது.
வீடுகளுக்கு சேமிப்பு தற்போது ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அனைத்து விதமான குடும்பங்களுக்கும் நல்ல சேமிப்பு கிடைக்கும்.
ஆண்டுக்கு 12.75 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு நடுத்தர குடும்பம், 7 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. தற்போது வரை இதற்கு 1.13 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்தி வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள், பயணம் மற்றும் மின்னணு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டு உள்ளதால், இனி இது 64,750 ரூபாயாக குறையும். இதனால், ஆண்டு ஒன்றுக்கு 48,550 ரூபாய் சேமிக்க முடியும்.
இந்த சேமிப்பை கொண்டு ஒரு புதிய வாகனத்தின் இ.எம்.ஐ., கட்டலாம் அல்லது குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் அல்லது கூடுதல் மருத்துவ காப்பீடு எடுக்கலாம்.
இந்த சேமிப்புகள் ஒரு கோடி குடும்பங்களுக்கு சென்றடையும் போது, மொத்தமாக 48,000 கோடி ரூபாய் சேமிக்கப்படும். இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, 2 முதல் 2.50 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வழங்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால் தான், ஜி.எஸ்.டி., வெறும் அரசியல் சீர்திருத்தம் மட்டுமல்லாது; ஒவ்வொரு வீட்டுக்கும் நிவாரணம், நிம்மதி, சேமிப்பு தரும் சீர்திருத்தமாகவும் மாறியிருக்கிறது.
சீர்திருத்தங்கள் இப்போது ஜி.எஸ்.டி., இன்னும் எளிமையாக்கப்பட்டுள்ளது. நான்கு வரி விகிதங்களிலிருந்து முதன்மையாக இரண்டு வரி விகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
விரைவில், மாநிலங்களின் ஒப்புதலுக்குப் பின், பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வருவது; மத்திய, மாநில அதிகாரிகள் இடையிலான குழப்பத்தை தீர்க்க, ஒருங்கிணைந்த முறையில் மதிப்பீடு செய்வது ஆகியவை நடைமுறைக்கு வந்தால், மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இன்னும் எளிதாக இருக்கும்.
கண்ணோட்டம்
எட்டு ஆண்டுகளான பின், ஜி.எஸ்.டி., நமக்கு என்ன கற்றுக் கொடுத்துள்ளது என்று பார்க்க வேண்டும்.
↓மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பெரிய சீர்திருத்தங்களும் வெற்றி பெறும்
↓டிஜிட்டல் வசதிகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்
↓மக்களுக்கு சேமிப்பை தரும் சீர்திருத்தமே நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.
இன்று ஜி.எஸ்.டி., வெறும் எண்களிலும், அரசு கணக்குகளிலும் மட்டும் இல்லை; ஒவ்வொரு வீட்டின் உணவு, கல்வி, மருந்துவ செலவிலும் உள்ளது.
இதனால் தான், ஜி.எஸ்.டி., இந்தியாவின் மிக முக்கியமான, நீண்ட கால கண்ணோட்டத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சீர்திருத்தம் என்று சொல்லலாம்.
இந்த சீர்திருத்தத்தை தொலைநோக்கு பார்வையுடனும், மக்களின் தேவைகளை மனதில் வைத்தும் அணுகிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மறைந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கு எவ்வளவு பாராட்டை தந்தாலும் தகும்.
- எஸ்.சுந்தர்ராமன் பட்டய கணக்காளர்