UPDATED : செப் 08, 2025 06:32 AM
ADDED : செப் 08, 2025 03:46 AM

கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, டில்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 'சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யில் மாற்றங்களை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும்' என்று அறிவித்தார்.
இதன்படி, சமீபத்தில் டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், தற்போது, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளாக உள்ள ஜி.எஸ்.டி., விகிதத்தை, 5, 18 என, இரு அடுக்குகளாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில், சிகரெட், புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும், 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை, வரும், 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நாடு முழுதும் சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி.,யானது, 2017 ஜூலை, 1 முதல் அமலுக்கு வந்தது. தற்போது, எட்டு ஆண்டுகளுக்குப் பின், ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், அரசியல்வாதிகள், தொழில் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
பால், சென்னா, பனீர், ரொட்டி, நோட்டு புத்தகங்கள், உயிர்காக்கும் மருந்துக்கள், காப்பீடு பிரீமியங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ததும், பொதுமக்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாகும். அத்துடன், பல பொருட்களை, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவதால், அவற்றின் தேவை அதிகரிக்கும் என்பதில் மாற்றமில்லை.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 50 சதவீத வரி விதித்துள்ளதால், அது இந்திய தொழில் துறையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தாக்கத்தை, உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதன் வாயிலாக குறைக்க முடியும். அதற்கு ஜி.எஸ்.டி., வரி விகித மாற்றம் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன், கார்கள், 'ஏசி' மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை பிறகு வாங்கிக் கொள்ளலாம் என, தள்ளிப்போட்டு வந்தவர்கள், அவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால், 22ம் தேதிக்கு பின் வாங்க முன்வருவர்.
கடந்த பிப்ரவரி மாதம், நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, வரி செலுத்துவோர் பயன் பெறும் வகையில், நேர்முக வரியான வருமான வரியில், சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அது நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக, மாதச்சம்பளம் பெறுவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது ஜி.எஸ்.டி., மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சொகுசு கார்கள் மற்றும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட், புகையிலை, பான் மசாலா போன்ற பாவப் பொருட்களுக்கு, சிறப்பு வரியாக, 40 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதும், குறிப்பிட்ட முன்னேற்றமே. ஆடம்பர பொருட்களுக்கு அதிக வரி என்பது, மக்கள்நலன் காக்கும் அரசிற்கான நல்ல நெறிமுறையாகும்.
பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் ஆடம்பர பொருட்கள் சந்தையை பயன்படுத்த விரும்புகின்றன. பல நாடுகளுடன் இந்திய அரசு தாராள வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு வரும் நிலையில், அன்னிய நிறுவனங்கள் நம் நாட்டில் கால் பதித்து ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அதே நேரத்தில், அந்நிறுவனங்களால் நம் நாட்டவருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியாது என்பதால், அவற்றின் உற்பத்தி பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது சரியானதே. அத்துடன் சிகரெட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களால் மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதுடன், அரசின் சுகாதார துறைக்கான செலவும் அதிகரிக்கிறது. எனவே, அவற்றுக்கு கூடுதல் வரி விதிப்பு நியாயமானதே.
மொத்தத்தில் ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பாராட்டத்தக்கவை; வரவேற்கத்தக்கவை.