சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை
சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை
UPDATED : மே 24, 2024 05:57 PM
ADDED : மே 24, 2024 05:56 PM

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்துள்ளனர். அதேநேரம் கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு உடனடியாக மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் கமிஷனர் கடந்த மே 12ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று (மே 23) விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இறுதி விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்திருந்தது.
மாறுபட்ட தீர்ப்பு
அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையில், 'சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்தேன். மாறாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தால், என்னிடம் அவ்வாறு பேசியவர்கள் தங்கள் இலக்கை அடைந்துவிடுவதாக அர்த்தம் ஆகிவிடும். அதனால்தான் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. எனவே, அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்வதாக' நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார்.
ஆனால் மற்றொரு நீதிபதியான பி.பி.பாலாஜி, 'வழக்கமான நடைமுறைப்படி இந்த வழக்கில் அரசுத்தரப்பு பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும். பதிலுக்கு பிறகே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
3வது நீதிபதி
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒரே மாதிரியாக உத்தரவிட்டனர்.