தருமபுரம் ஆதீனம் மணி விழாவில் 'குருஞானசம்பந்தர் அட்டகம்' நுால் வெளியீடு
தருமபுரம் ஆதீனம் மணி விழாவில் 'குருஞானசம்பந்தர் அட்டகம்' நுால் வெளியீடு
ADDED : நவ 06, 2025 02:07 AM

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனகர்த்தர் மணிவிழா மாநாட்டின் ஐந்தாம் நாளான நேற்று, 'குருஞானசம்பந்தர் அட்டகம்' என்னும் நுால் வெளியிடப்பட்டது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மணிவிழா, தருமபுரம் ஆதீன கல்லுாரியில் கடந்த நவ., 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ஐந்தாம் நாளான நேற்றைய விழாவில், நுால் வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவையாறு பஞ்ச நதீஸ்வர சுவாமி தேவஸ்தா னம் விசாரணை கட்டளை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார்.
'குருஞானசம்பந்தர் அட்டகம்' என்னும் நுாலை சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவஞானம் வெளியிட, முதல் பிரதியை 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
விழாவில் ஆதீனப்புலவர் ஞானசுந்தரம், மதுரை தியாகராஜா கல்லுாரி செயலர் ஹரி தியாகராஜன், தருமபுரம் ஆதீன கல்லுாரி செயலர் செல்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், சென்னை பச்சையப்பன் கல்லுாரி தமிழ் துறை முன்னாள் தலைவர் ஞானசுந்தரத்தின் பணியை பாராட்டி, 'தருமை ஆதீன புலவர் பட்டத்தை' குருமகா சன்னிதானம் வழங்கினார்.

