ADDED : மார் 10, 2025 10:01 AM

புதுடில்லி: 'ஹையர்' நிறுவனம் தன் 'ஏசி' உற்பத்தி திறனை விரிவுபடுத்த இந்தியாவில் கூடுதலாக 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக இந்நிறுவனத்தின் இந்திய தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த முன்னணி 'பிரிஜ்' மற்றும்'டிவி' தயாரிப்பாளரான ஹையர் நிறுவனம், இந்தியாவில் 800 கோடி ரூபாயில் புதிய உற்பத்தி முதலீட்டை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் வாயிலாக புதிய ஆலையை உருவாக்கி 'ஏசி' உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்வதுடன், முக்கிய மின்னணு உதிரிபாகமான பி.சி.பி., எனப்படும் 'பிரின்ட்டட் சர்க்யூட் போர்டு'கள் உற்பத்தியையும் துவங்க உள்ளதாக இந்நிறுவனத்தின் இந்திய தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
புதிய ஆலைக்கான அடிக்கல் நாட்டுவிழா, கிரேட்டர் நொய்டாவில் உள்ள தற்போதைய ஆலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. 700 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கவுள்ள புதிய 'ஏசி' உற்பத்தி ஆலை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணி நிறைவடைந்து உற்பத்தியை துவங்கும். ஆண்டுக்கு 25 லட்சம் 'ஏசி' உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும், பி.சி.பி., ஆலை 100 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலை வரும் அக்டோபர் மாதம், 'ஏசி, வாஷிங்மிஷின்' மற்றும் 'பிரிஜ்' களுக்கான சர்க்யூட் போர்டுகளை உற்பத்தி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.