ADDED : மே 15, 2025 04:57 AM

தமிழக இளைஞர் காங்கிரசில் சேர்க்கப்பட்டுள்ள போலி உறுப்பினர்கள், 1 லட்சத்து, 52 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், கடந்த ஆண்டு டிச., 29ல் அறிவிப்பு வெளியானது. 'ஆன்லைன்' வாயிலாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டது.
உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கைகள், கடந்த ஜன., 18ல் துவங்கி, பிப்., 27ல் முடிவடைந்தன. இதில், தமிழகம் முழுதும், 3 லட்சத்து 82 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதில், பெயர், முகவரி, மொபைல் போன் எண்கள் போலியாக தரப்பட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் எல்லாம் போலி உறுப்பினர்கள் என, உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 1 லட்சத்து, 52 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சரியான ஆவணங்கள் இல்லாததால் நீக்கப்பட்ட உறுப்பினர்களில் இருந்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மீண்டும் சிலரை உறுப்பினராக்கும் யோசனையும் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -