தீபாவளி வாழ்த்து: நல்ல மாற்றத்துக்கு துணை முதல்வரே சாட்சி!
தீபாவளி வாழ்த்து: நல்ல மாற்றத்துக்கு துணை முதல்வரே சாட்சி!
ADDED : அக் 27, 2024 08:20 AM

சென்னை: இத்தனை ஆண்டுகளாக தவிர்த்து வந்த நிலையில், முதல் முறையாக துணை முதல்வர் உதயநிதி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'இந்த மாற்றம் உண்மையாக இருந்தால் வரவேற்கத்தக்கது தான்' என்கின்றனர், ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.
தி.மு.க., தலைவர்களுக்கு ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. 'தங்களை பகுத்தறிவாதி இல்லை என்று சொல்லி விடுவார்களோ' என்ற அச்சத்தின் காரணமாக அந்த தயக்கம் இருக்கிறது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.
அதேநேரத்தில் மற்ற மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு முன்தினமே, மேடைப்பேச்சு வாயிலாகவோ, சமூகவலைதள வாயிலாகவோ முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டு வாழ்த்து தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அந்த கோரிக்கைகளை அவர் கண்டுகொள்வதில்லை. இந்த நடைமுறை நீண்ட காலமாகவே தி.மு.க., அரசியலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் உதயநிதி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், 'நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கொண்டாடுபவர்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்' என கூறினார்.
தி.மு.க.,வின் முன்னணி தலைவர் ஒருவர் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பது இது தான் முதல் முறை என்கின்றனர், அரசியல் நோக்கர்கள். 'வெறும் அரசியலுக்காக இல்லாமல், உண்மையலேயே மனமாற்றம் ஏற்பட்டிருந்தால் வரவேற்கத்தக்கது தான்' என்கின்றனர், ஆன்மிகத்தில் ஈடுபாடு உடைய பெரியோர்.
துணை முதல்வரிடம் ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றம், அவரது குடும்பத்திலும் எதிரொலிக்குமா, முதல்வரும் இந்தாண்டு தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.