UPDATED : மே 22, 2024 05:06 PM
ADDED : மே 22, 2024 04:54 PM

சென்னை: 'தமிழகத்தையும், தமிழர்களையும் பிரதமர் மோடி கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, புரி ஜெகன்நாதர் கோயிலின் கருவூலத் திறவுகோல் தமிழகத்தில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தமிழத்தை கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் தமிழ்மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்?
எதிர் விளைவுகள்
தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய நரேந்திரமோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இதற்கான எதிர்விளைவுகளை வருங்காலத்தில் பா.ஜ., தமிழகத்தில் எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

