உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
ADDED : மார் 12, 2025 02:57 PM

சென்னை: '' உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தமிழில் பெயர் வையுங்கள்,'' என சென்னையில் நடந்த திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
முதல்வர் ஸ்டாலினின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு 72 ஜோடிகளுக்கு திருமண நடத்தி வைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்ஜ், டிவி,பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
பிறகு உதயநிதி பேசியதாவது: மணமக்களுக்கு ஒரே வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலேயும் மத்திய அரசு பார்த்துக் கொண்டு உள்ளது.
மத்திய அரசு குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தியது. மக்கள் தொகை அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த வேண்டும் என சொன்னது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழகம். அதற்காக தண்டிக்கப்படுகிறோம். தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதை பற்றி தான் 10 நாட்களாக தலைவர்கள் பேசிக் கொண்டு உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தொகுதி மறுவரையறை வந்தால் எட்டு தொகுதிகள் குறைந்து 31 ஆகி விடும். தமிழக மக்கள் தொகை 7 கோடியாக உள்ளது. குடும்ப கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, விழிப்புணர்வு ஏற்படாத மாநிலங்கள் பலனடைய போகின்றன. வட மாநிலங்களில் 100 தொகுதிகள் கூடுதலாக பெறும். தொகுதிகள் குறைந்தால், நம்முடைய உரிமைகளை பெற முடியாது. மணமக்கள் படித்தவர்கள். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தமிழில் பெயர் வையுங்கள். இவ்வாறு உதயநிதி பேசினார்.