விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த மக்களை வெளியேற்ற உயர்நீதிமன்றம் தடை
விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த மக்களை வெளியேற்ற உயர்நீதிமன்றம் தடை
ADDED : நவ 21, 2024 01:26 AM

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு மக்களை வீடுகள், நிலத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை சின்ன உடைப்பு மலைராஜன் உட்பட 258 பேர் தாக்கல் செய்த மனு: அயன்பாப்பாகுடியின் சின்ன உடைப்பு கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன. விவசாயத்தை சார்ந்துள்ளனர். மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக எங்கள் பகுதியில் ஏற்கனவே 2 முறை நிலம் கையகப்படுத்தப்பட்டது. 200 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. அருகில் அவர்களுக்கு வீடுகள் அமைக்க பிளாட்கள் ஒதுக்கப்பட்டது.
வீடுகள் அமைக்க முயற்சிக்கும் சூழலில், அங்கு விமான நிலை விரிவாக்கப் பணி துவங்க உள்ளது. யாரும் புதிதாக வீடு கட்ட வேண்டாம் என அரசு தரப்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் யாரும் வீடு கட்ட முடியவில்லை. பிளாட்களை விற்கவும் முடியவில்லை.
சட்டப்படி மறு வாழ்வு, மறு குடியமர்வு, பள்ளி, கோயில், மைதானம், மயானம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்துதர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் படித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும். அதன் பின்தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்.
நிலத்திற்கு இழப்பீடு வழங்கியது போதுமானதல்ல. சட்டம், விதிகளை பின்பற்றாமல் எங்களை வீடுகள், பிளாட்கள், பட்டா நிலத்திலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறு வாழ்வு, மறுகுடியமர்விற்கு ஏற்பாடு செய்யாமல் எங்களை வீடுகள், நிலத்திலிருந்து வெளியேற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
அவசர வழக்காக நீதிபதி என்.மாலா விசாரித்தார்.
தமிழக அரசு தரப்பு: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து, சம்பந்தப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை வெளியேற்ற நோட்டீஸ் அளிக்கவில்லை. சட்டப்படி நோட்டீஸ் அளித்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: சட்டம், விதிகளை அரசு தரப்பில் பின்பற்றாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை முதன்மைச் செயலர், நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை டிச.11 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.