செவிலியரின் பாலினத்தை மாற்றும்படி ஐகோர்ட் உத்தரவு
செவிலியரின் பாலினத்தை மாற்றும்படி ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 02, 2026 07:00 AM

சென்னை: தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தில், மூன்றாம் பாலினத்தவர் என, பதிவு செய்தவர், நர்சிங் படிப்பை முடித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருந்தார்.
கடந்த 2024ம் ஆண்டு, பாலின உறுதிப்படுத்துதல் அறுவை சிகிச்சை செய்த பின், தன் பாலினத்தை ஆண் என மாற்றி, பெயரை மாற்றியுள்ளார்.
தற்போது, புதிய சூழலில் பணிபுரிவதற்காக, கர்நாடகாவுக்கு இடம் பெயர முடிவு செய்து, தன் நர்சிங் பதிவில், மூன்றாம் பாலினத்தவர் என்பதற்கு பதில், ஆண் என மாற்றம் செய்ய, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'பதிவை கர்நாடகா கவுன்சிலுக்கு மாற்றுவது தொடர்பான கடிதங்களில், ஏற்கனவே மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என குறிப்பிடக்கூடாது என, தமிழ்நாடு கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ''தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் ஆவணங்களில், மனுதாரரின் பாலினத்தை, ஆண் என மாற்றம் செய்ய உத்தரவிட்டு, நர்சிங் பதிவை கர்நாடகாவுக்கு மாற்றுவது தொடர்பான கடிதங்களில், மனுதாரர் மூன்றாம் பாலினத்தவராக, முன்பு பதிவு செய்திருந்தார் என குறிப்பிடக் கூடாது.
''ஆண் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரின் பெயர், பாலினத்தை மாற்றி, எட்டு வாரங்களுக்குள், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், கர்நாடகா நர்சிங் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.
