அவரு குறை சொல்லலாம்; உண்மை மக்களுக்கு தெரியும்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
அவரு குறை சொல்லலாம்; உண்மை மக்களுக்கு தெரியும்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
UPDATED : டிச 02, 2024 03:05 PM
ADDED : டிச 02, 2024 02:58 PM

விழுப்புரம்: 'எதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லலாம். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவுக்கு மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக கன மழை பெய்துள்ளது. மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கி உள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தண்ணீர் வடிந்த பகுதிகளில் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிவாரணம்
1.29 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தோர் குடும்பங்கள், கால்நடைகள், சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
மக்களை பாதிப்பில் இருந்து மீட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப, மத்திய அரசிடம் கூறுவோம். மத்திய அரசிடம் நிவாரணம் கோருவோம். மழை பாதிப்புகள் தொடர்பாக பார்லிமென்டில் பேச அனுமதிக்கப்படவில்லை.
மீட்பு பணி
குற்றம் சொல்வது தான் எதிர்க்கட்சி தலைவரின் கடமை. இது பற்றி நாங்கள் என்றும் கவலைப்பட்டது இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். எந்த ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று மக்களுக்கு தெரியும். திருவண்ணாமலையில் மீட்பு பணி நடந்து கொண்டு தான் இருக்கிறது. திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐ.ஐ.டி., பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் 7,826 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 147 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.