'ஓட்டு போட்ட மக்களுக்காக தான் கைது செய்ய உத்தரவிடவில்லை'
'ஓட்டு போட்ட மக்களுக்காக தான் கைது செய்ய உத்தரவிடவில்லை'
UPDATED : ஜூன் 17, 2025 03:01 AM
ADDED : ஜூன் 17, 2025 12:39 AM

நீதிமன்றத்தில் ஆஜரான எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தியிடம், 'எந்த தொகுதி எம்.எல்.ஏ., நீங்கள்; எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்; கட்சி துவங்கி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன' என, நீதிபதி பி.வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில், 70 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்று, 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், கட்சி துவங்கி, 47 ஆண்டுகள் ஆவதாகவும், பதிலளித்தார்.
இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:
தேர்தலில் உங்களுக்கு, 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஓட்டளித்துள்ளனர். உங்களுக்கு ஆதரவாக ஓட்டளித்தது, அவர்களின் குரலாக சட்டசபையில் பேசி சேவை செய்ய தானே தவிர, கட்டப்பஞ்சாயத்து நடத்த அல்ல.
மக்கள் எதற்காக உங்களுக்கு ஆதரவளித்தனர் என்பதை மறந்துள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் ஓட்டளித்தனரா.
சாதாரண மனிதரல்ல
சட்டசபைக்கு சென்று, மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டது, உங்கள் கட்சி விவகாரமா.நீங்கள் சாதாரண மனிதர் அல்ல; மக்கள் பிரதிநிதி.
மூன்றாம் தர நபராக செயல்படக்கூடாது. ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தொகுதிக்கும் நீங்கள் தான் எம்.எல்.ஏ.,
நீங்களே காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பர்.
எம்.எல்.ஏ., என்ற போர்வையை பயன்படுத்தி, பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர, கட்டப்பஞ்சாயத்து செய்யக் கூடாது.
கட்டப்பஞ்சாயத்து செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
போலீசாரை தடுக்கும் வகையில் ஆட்களை சேர்த்து செயல்பட்டால், வேறு மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்காகவே, உங்களை கைது செய்ய உத்தரவிடவில்லை.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உங்களுக்கு நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, உங்க பெயரை பயன்படுத்தினாலும் குற்றம் தான். ஓட்டளித்த மக்களை ஏமாற்றக்கூடாது. விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும். கட்சி நிர்வாகிகளை உடன் அழைத்து செல்லக்கூடாது.
உங்கள் ஆதரவாளர்கள் இதில் ஏன் வருகின்றனர்; இது அரசியலா.உங்கள் அனுமதியின்றி, கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடினால், அவர்களுக்கு நீங்கள் அறிவுரை கூறுங்கள்.
மக்கள் பிரதிநிதியான நீங்கள், தனியாக செல்ல பயப்பட வேண்டிய அவசியம் என்ன.சட்டம் இயற்றுபவர்களான நீங்களே, விசாரணைக்கு முன்வந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும்.
அனைத்து கட்சிகளும், மக்களை தவறாக வழிநடத்துகின்றன. கட்சி கூட்டம் என்றால், யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லுங்கள்.
வேடிக்கை பார்க்காது
அதில் நீதிமன்றம் கேள்வி எழுப்பாது. ஆனால், இதுபோல கட்டப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களில் யார் ஈடுபட்டாலும், நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது.
போலீசாரின் விசாரணையை தடுக்கும் வகையிலும், தனிப்பட்ட நபருக்காகவும் தேவையின்றி கூடுபவர்களை, மண்டபத்தில் வைத்து, பிரியாணி கொடுத்து, போலீசார் அனுப்பி விடுகின்றனர். அதை விடுத்து, அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகூறினார்.